தலைமுடி உதிர்தல்
கரு கரு தலைமுடி அனைவரது கனவாக உள்ளது. சிலருக்கு அந்த கனவு நிறைவேறாமலே போய்விடும். தலைமுடி உதிர்தல் ஆலோபிசியா என்று அழைக்கப்படுகிறது. உடல் அல்லது தலையில் இருந்து முடி உதிர்வது ஆலோபிசியா ஆகும். சராசரியாக ஒருவரது தலையில் 100000 முதல் 150000 வரை தலைமுடி இருக்கும். தினமும் சராசரியாக 100 முடி நம் தலையில் இருந்து உதிரும். அதனை ஈடு செய்ய அதே அளவு முடி வளர்ந்து விடும். முடி கொட்டுதல் என்பது, உதிரும் தலைமுடியின் அளவு திரும்ப வளரும் தலைமுடியின் அளவை விட அதிகமாக இருப்பது ஆகும்.
தலைமுடி கொட்டுதலில் சில உண்மைகள்
அனைத்து மனிதர்களின் வாழ்க்கையிலும் முடி கொட்டுதல் ஒரு முறையேனும் நடைபெற்று விடும். தலைமுடி உடைந்து உதிர்தல் மற்றும் தலைமுடி வளர்ச்சி இல்லாமல் இருப்பது ஆகிய இரண்டும் வெவேறு குறைபாடுகள். ஆன்றோகேநேடிக் குறைபாடு ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படுகிறது. பெரும்பாலும் இது ஆண்களை பாதிக்கிறது. கான்சர் போன்ற நோய்களினாலும் முடி உதிருகிறது.
உடல் ரீதியான பிரச்சினைகளினால் உதிரும் தலைமுடி
விபத்தினால் உடல் குறைபாடு, அறுவை சிகிச்சை, காய்ச்சல் போன்றவற்றால் தலைமுடி உதிர்ந்தால் அதற்கு telogen effluvium என்று பெயர். பொதுவாக முடி வளர்தலில் மூன்று நிலைகள் உள்ளன. முடி வளர்தல், முடி ஓய்வெடுத்தல், மற்றும் முடி கொட்டுதல். உடல் ரீதியான உபாதைகள் உள்ளவர்களுக்கு முடி கொட்டுதல் சற்று அதிகமாக காணப்படுகிறது. இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால் நம் உடல் சரியாகும் போது முடி உதிர்தல் குறைய ஆரம்பிக்கும்.
கர்ப்ப காலத்தில் முடி உதிர்தல்
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் பொது அவள் தலைமுடி அவ்வளவாக உதிர்வது கிடையாது. ஆனால் குழந்தை பிறந்த முதல் நாளில் இருந்து அவளது முடி உதிர்வதை உணர முடியும். இது பயப்பட வேண்டிய விஷயம் இல்லை. இரண்டே மாதங்களில் இழந்த முடியை திரும்பப் பெறலாம்.இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்வாகும்.
தலையில் ஊற்றும் தண்ணீர்
அடிக்கடி தண்ணீர் மாற்றி குளிப்பதினாலும் முடி உதிரலாம். தண்ணீரில் உள்ள உப்பின் காரணமாகவும் தலை முடி உதிரல் அதிகமாகலாம்.
விட்டமின் குறைபாட்டினால் தலைமுடி உதிரும்
உடலில் சரியான அளவு விட்டமின் இல்லாமையாலும் முடி உதிரலாம். நாம் உண்ணும் உணவில் சரியான அளவில் வைட்டமின், மினரல் உள்ளதா என்பதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். வைட்டமின் பி (B), வைட்டமின் இ (E) மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவை எடுத்துகொள்ள வேண்டும்.
தலைமுடி சுத்தமின்மை
தலை முடியை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் முடி உதிர்வத்தைத் தடுக்கலாம். தினமும் தலைக்கு குளித்து தலையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
தலைமுடியில் பொடுகுத் தொல்லை
பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் கண்டிப்பாக முடி உதிர்வதற்கு ஆளாவார்கள். பொடுகை போக்குவதன் மூலம் முடி கொட்டுவதில் இருந்து தப்பிக்கலாம்.
தூக்கமின்மையினால் தலைமுடி உதிரும்
தூக்கம் மனித உடலுக்கு மிகவும் அத்யாவசியமாகும். தூக்கம் குறையும் போது தலை முடி உதிர்கிறது. நாளொன்றுக்கு சராசரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். இதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம்.
தலைமுடி உதிராமல் இருக்க சீவும் முறை
தலையை நாம் சீவும் முறை கூட முடி கொட்டுவதற்கு ஒரு காரணமாக அமையலாம். நீளமான முடியாய் இருந்தால் முதலில் தலையில் சிக்கில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தலையின் உச்சந்தலையில் இருந்து தலைமுடி நுனி வரை சீப்பை வைத்து சீவ வேண்டும். இம்முறை தலையில் இரத்த ஓட்டம் சீராக பாய்வதற்கு உதவுகிறது.
தலைமுடி உதிர்வதை தடுக்க வீட்டு மருத்துவங்கள்
முடி கொட்டுவதை தடுக்க சிலர் பியுட்டி பார்லருக்கு பணத்தை விரயம் செய்வார்கள். ஆனால் அதற்கு அவசியமே இல்லை. வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிமையாக முடி கொட்டுவதை தடுக்கலாம். இங்கே கொடுக்கப் பட்டுள்ள முறைகள் யாவும் மிகவும் எளிமையான முறைகள் ஆகும்.
தலைமுடி உதிர்வதை தடுக்க கறிவேப்பிலை மருந்து
கறிவேப்பிலையை அதிகம் உணவில் எடுத்து கொள்வதன் மூலம் தலைமுடி உதிர்வதை தடுப்பதோடு அடர்த்தியான முடியையும் பெறலாம். கறிவேப்பிலையில் இரும்புசத்து அதிக அளவில் உள்ளது. உணவில் கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் சாப்பிட வேண்டும். வாரம் ஒரு முறை கறிவேப்பிலை சாதம் வைத்து சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும். தலைமுடிக்கும் நல்லது.
முடி கொட்டுவதை தடுக்க தயிர் மருந்து
வாரம் ஒருமுறை குளிப்பதற்கு முன் தயிறை ஒரு அரைமணி நேரம் தலையில் ஊற வைத்து குளிப்பதால் கேசத்துக்கு ஊட்டசத்து கிடைத்து முடி கொட்டுவது குறையும்.
அதிகமான முடி உதிர்வை தடுக்க இளநீர் மற்றும் தேங்காய்ப்பால் மருந்து
இளநீர் மற்றும் தேங்காய்ப்பால் கொண்டு தலைமுடியை கழுவுவதன் மூலம் முடி கொட்டுவதில் இருந்து விடுபடலாம்.
தலைமுடி உதிர்வதை தடுக்க ஆயில் மசாஜ்
இளஞ்சூடான எண்ணையை தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம். இதன் மூலம் தலையில் இரத்த ஓட்டம் அதிகமாக பாய்ந்து முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைகின்றன.
முடி உதிர்வதை தடுக்க எலுமிச்சை விதை, மிளகு மருத்துவம்
முடி உதிர்ந்த இடத்தில எலுமிச்சை விதை மற்றும் மிளகு சேர்த்து அரைத்து தடவி வர முடி கொட்டுவது நிற்பதோடு புதியதாக முடி வளர்வதற்கும் உதவுகிறது.
தலைமுடி உதிர்வதைத் தடுக்க பூசணி கொடி இலை சாறு
பூசணி கொடியின் கொழுந்து இலையை பறித்து சாறினை பிழிந்து தலையில் ஏற்பட்டுள்ள சொட்டையில் தடவி வர முடி வளரத் தொடங்கும்.
தலைமுடி உதிராமல் இருக்க வேப்பிலை நீர் மருத்துவம்
எல்லா இடங்களிலும் சுலபமாக கிடைக்கும் மூலிகை வேப்பிலை. வேப்பிலையை வேக வைத்து அந்த நீரை தலைக்கு குளிக்கும் பொது பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வது குறையும்.
முடி கொட்டுவதைத் தடுக்க எண்ணெய்க் குளியல்
தேங்காய் எண்ணெய், விளகெண்ணை, நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு அதனை ஒன்றாக கலந்து தலையில் மசாஜ் செய்து பின்பு ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் முடி கொட்டுவது நிற்கும்.
தலைமுடி பொடுகுக்கு சின்ன வெங்காயம் மருந்து
சின்ன வெங்காயத்தை அரைத்து தலைப்பகுதியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து வர பொடுகும் அதனால் ஏற்படும் முடி கொட்டுதலும் நிற்கும்.
தலைமுடிக்கு கற்றாளை மருத்துவம்
கற்றாளைச் செடி அனைத்து வீடுகளிலும் வளர கூடிய செடி. கற்றாழையின் சாறினை எடுத்து தலையில் தேய்த்து குளித்து வர உடல் சூடு குறைந்து பொடுகு நீங்கி முடி நன்கு வளரும்.
தலைமுடி உதிராமல் இருக்க செம்பருத்திப்பூ சாறு மருத்துவம்
செம்பருத்திப் பூவை கசக்கி சாறு பிழிந்து கொண்டு அந்த சாறினை முடி கொட்டிய இடத்தில தேய்த்து வர முடி கொட்டுவது நின்று முடி வளரத் தொடங்கும்
தலைமுடி உதிராமல் இருக்க வெந்தயம் மருத்துவம்
வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொண்டு தலையில் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது நின்று முடி நன்கு வளர தொடங்கும்.
தலைமுடி உதிராமல் இருக்க பாதாம் எண்ணெய் மருத்துவம்
பாதாம் எண்ணையை தலையின் வேர்க்காலில் தேய்த்து நன்றாக ஊற வைத்து குளித்து வர முடி கொட்டுவது நிற்கும்.
தலைமுடி உதிராமல் இருக்க கொத்தமல்லி மருத்துவம்
கொத்தமல்லி எளிமையாக கிடைக்கும் ஒரு பொருளாகும். அனைத்து வீடுகளிலும் கட்டாயமாக இருக்கும் ஒரு பொருள்.கொத்தமல்லி இலை சாறினை எடுத்து கொண்டு தலையில் தடவி வர முடி கொட்டுவது தடுக்கப்படும்.
தலைமுடி உதிராமல் இருக்க சோம்பு மருத்துவம்
சோம்பினை நன்கு அரைத்துக் கொண்டு தலையில் வாரம் மூன்று முறை தேய்த்து வர முடி கொட்டுவது தடுக்கப்படும்.
தலைமுடி உதிராமல் இருக்க பால், மிளகுபொடி மருத்துவம்
பாலில் முடி வளரத் தேவையான புரதச்சத்து அதிகம் உள்ளது. பாலுடன் மிளகுப் பொடியை கலந்து தலையின் வேர்க்கால்களில் தேய்த்து பதினைந்து நிமிடம் ஊற வைத்து குளித்து வர முடி கொட்டுவது தடுக்கப்படும்.
கொத்தமல்லி – Kothamalli – Coriander
வெங்காயம் – Venkayam – Onion
மிளகு – Milaku – Pepper
கருவேப்பிலை – Karuveppilai – Curry leaves
எலுமிச்சை – Elumichai – Lemon
பால் – Paal – Milk
தேங்காய் – Theangaai – Coconut
இளநீர் – Ilaneer – Coconut water
வேப்பிலை – Vepilai – Neem leaf
நல்லெண்ணெய் – Nallennei – Sesame oil
வெந்தயம் – Venthayam – Fenugreek
பாதாம் பருப்பு – Paadaam paruppu – Almond
சோற்றுக் கற்றாளை – Sotrukkatraalai – Aloe vera
செம்பருத்திப்பூ – Semparuthi poo – Hibiscus flower
தயிர் – Thayir – Curd
தண்ணீர் – Thanneer – Water
சோம்பு – Soambu – Anise
பூசணி இலை – Poosani ilai – Pumpkin leaf
———————————————————-