ஒற்றைத் தலைவலி என்பது தலையின் ஒரு பக்கம் மட்டும் வலி ஏற்படுவதாகும். பொதுவாக தலைவலி என்பது தலையின் முழுப்பகுதியும் வலி ஏற்படும். ஆனால் ஒற்றைத் தலைவலி சற்றே வித்தியாசமானது. தலையின் ஒரு பக்கம் வலி ஏற்பட்டாலும் மறு பக்கம் எந்த ஒரு வலியும் இருக்காது.
ஒற்றைத் தலைவலி ஏற்படக் காரணங்கள்
மது (ஆல்கஹால்) அருந்துவதால் ஒற்றை தலைவலி வரும்
மது அருந்துவதால் ஒற்றைத் தலைவலி உண்டாகும். மதுவை தவிர்ப்பது ஒன்றே இதற்கு சிறந்த வழி. இரவில் மது அருந்திய பின் காலையில் தற்காலிகமாக வரும் Hangover தலைவலி அல்ல இது. மது அருந்துவதால் நரம்புகள் மெல்ல மெல்ல பலவீனமடைந்து ஒற்றை தலைவலி பிரச்சனை நிரந்தரமாக ஆரம்பமாகும்.
சரியான நேரத்தில் உண்ணாமை ஒற்றை தலைவலி உண்டாக்கும்
மனிதன் அன்றாடம் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும். சில நேரங்களில் வேலைப்பளு காரணமாக உணவு உட்கொள்ளும் நேரத்தில் உட்கொள்ளாமல் இருப்பதனால் ஒற்றைத் தலைவலி ஏற்படும். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்.
மனஅழுத்தத்தினால் ஒற்றை தலைவலி வரும்
ஒற்றைத் தலைவலி ஏற்பட முக்கியமான காரணங்களில் ஒன்று மனஅழுத்தம். குடும்பத்தில் உண்டாகும் சண்டை சச்சரவுகள் மூலம் ஒற்றை தலைவலி வர நிறைய வாய்ப்புள்ளது. யோகா மற்றும் தியானம் போன்றவற்றில் ஈடுபட்டு மனவலிமை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் ஒற்றை தலைவலியில் இருந்து விடுபடலாம்.
சரியான தூக்கமின்மையால் ஒற்றை தலைவலி உண்டாகும்
சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் உறங்க வேண்டும். ஒரு சில காரணங்களுக்காக தூக்கத்தைத் தவிர்த்தால் பின் ஒற்றைத் தலைவலியை தவிர்க்க முடியாது.
ஒவ்வாமை மற்றும் நோய் தொற்று ஒற்றை தலைவலிக்கு காரணங்கள்
அடிக்கடி உண்டாகும் சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய் தொற்றினால் கூட ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். சளி மற்றும் காய்ச்சலை விரட்டுவதன் மூலம் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபடலாம்.
மருந்து மாத்திரைகள் கூட ஒற்றை தலைவலிக்கு காரணமாகலாம்
அதிக அளவு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதினாலும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். சில மருந்து மாத்திரைகளை தொடர்ந்து தினமும் எடுத்து வரும் பழக்கம் இருந்து திடிரென ஒருநாள் எடுக்காமல் போனால் ஒற்றை தலைவலி உடனே வரும். பொதுவாகவே மருந்து மாத்திரைகளை தொடர்ச்சியாகவோ வலிகளுக்காக ஒரே ஒரு முறை மட்டும் தானே என்று அதிக அளவு எடுத்துக் கொள்வதோ தவறான அணுகுமுறை ஆகும்.
மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாவிட்டால் என்னால் நிம்மதியாக தூங்கவே முடியாது என்ற வாதத்தை எடுத்துக் கொள்ளவே முடியாது. தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் நாளடைவில் அந்த மருந்து மாத்திரைகள் நம் உடலில் எந்த ஒரு நல்ல மாற்றத்தையும் உண்டாக்காது. நாளாக நாளாக அந்த மருந்து மாத்திரைகளின் சக்தியை அதிகப்படுத்தி உண்ண வேண்டிய நிலைக்கு தள்ளப்பட நேரிடும்.
தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்கள் உடனே மொத்தமாக நிறுத்தாமல் இயற்கையான பழங்களையும் உணவு முறைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி கொண்டு மருந்து மாத்திரைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டே வர வேண்டும். ஒற்றை தலைவலிக்கு மட்டுமல்ல மற்ற எல்லா நோய்களுக்கும் மருந்தாக பழங்களையும் இயற்கை உணவு முறைகளையும் அதிகப்படுத்துவது ஒன்றே நிரந்தர தீர்வாகும். சிறிய வயதிலேயே மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால் வயதான காலத்தில் மருந்து மாத்திரைகளுக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டி வரும். தினம் ஒரு பழம் என்ற பழக்கம் குழந்தை பருவத்திலேயே பழகி விட்டால் அதைவிட அற்புதமான பழக்கம் வேறேதும் இல்லை.
நரம்பு தொடர்பான காரணங்களாலும் ஒற்றை தலைவலி வரும்
நரம்பு தொடர்பான பிரச்சினைகளால் சில நேரம் ஒற்றைத் தலைவலி ஏற்படும். சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பரம்பரை பரம்பரையாக வரலாம். நரம்பு பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலம் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபடலாம்.
ஒற்றை தலைவலிக்காக எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
- தாங்க முடியாத தலைவலி ஏற்படும் போது.
- கண் பார்வை மங்கினால்.
- இருமும் போது தலைவலி அதிகம் ஏற்பட்டால்.
- சுயநினைவை இழக்க நேரிட்டால்.
- தலைவலியுடன் சேர்ந்து காய்ச்சல் ஏற்பட்டால்.
- கழுத்தை அசைக்க முடியாவிட்டால்.
மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும்.
ஒற்றைத் தலைவலியைப் போக்க வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே தமிழ் மருந்துகள் தயார் செய்து எடுத்துக் கொள்ளலாம்.
ஒற்றை தலைவலி குணமாக சுக்குமல்லி காபி நிவாரணம்
ஒற்றைத் தலைவலி உண்டானதும் சூடாக சுக்குமல்லி காபி பருகினால் தொண்டைக்கு இதமாக இருப்பதோடு ஒற்றைத் தலைவலியையும் போக்கும்.
ஒற்றை தலைவலி உடனே நீங்க பட்டை சேர்த்த டீ
டீ அருந்துபவர்கள் டீயுடன் சிறிது பட்டைப் பொடியும் சேர்த்து அருந்தினால் ஒற்றைத் தலைவலியில் இருந்து தற்காலிகமாக விடுபடலாம். டீ அருந்தாதவர்களாக இருந்தால் சிறிது சுடு நீரில் பட்டைப் பொடியை சேர்த்து அருந்தலாம்.
ஒற்றை தலைவலி போக குட்டித் தூக்கம்
அதிகமான வேலைப்பளு மற்றும் மன அழுத்தினால் ஏற்படும் ஒற்றைத் தலைவலியை ஒரு குட்டித் தூக்கம் போடுவதன் மூலம் விரட்டலாம்.
ஒற்றை தலைவலி போக உணவு உண்ணும் பரிசோதனை முறை
சிலருக்கு பசியினால் ஒற்றை தலைவலி ஏற்படும். ஆனால் ஒற்றை தலைவலி பசியினால் தான் உண்டாகிறது என்பதை தெரியாமலே இருப்பார்கள். இதை அனுபவபூர்வமாக தெரிந்து கொள்ள ஒற்றைத் தலைவலி ஏற்படும் போது பசிப்பது போல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறிது உணவு எடுத்துக் கொண்டு பரிசோதனை செய்து பார்க்கலாம். உணவு எடுத்த பின் ஒற்றை தலைவலி உடனே நீங்கி விட்டால், வாழ்த்துக்கள் இத்தனை காலம் உங்களுக்கு பசியின் மூலமாகத்தான் ஒற்றை தலைவலி ஏற்பட்டிருக்கிறது. இனிமேல் சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.
சரியான அளவு தண்ணீர் அருந்தாமை ஒற்றை தலைவலிக்கு ஓர் காரணம்
மேலே உணவு உண்டு பரிசோதனை செய்து பார்ப்பதை போல தண்ணீர் குடித்தும் பரிசோதனை மேற்கொள்ளலாம். பெரும்பாலான ஆய்வு முடிவுகள் ஒற்றை தலைவலிக்கு உடலின் நீர்ச்சத்து குறைபாடே காரணம் என்று கூறுகிறது. உடலில் நீரிழப்பு ஏற்படுவதினால் உண்டாகும் ஒற்றைத் தலைவலி சரியான அளவு நீர் அருந்துவதால் விலகும்.
ஒற்றைத் தலைவலியை போக்க இஞ்சி ஒரு அருமருந்து
இஞ்சி ஒற்றைத் தலைவலிக்கு அருமருந்தாகும். இஞ்சியை டீயிலோ அல்லது சுடு நீரிலோ தட்டி தெளிய வைத்து வடிகட்டி கலந்து குடிக்கலாம். அல்லது இஞ்சி விழுதை தலையில் பற்று போட்டு ஒற்றைத் தலைவலியை விரட்டலாம்.
ஒற்றைத் தலைவலியை போக்க புதினா சாறு மருந்து
புதினாவில் உள்ள உட்பொருட்கள் ஒற்றைத் தலைவலியை போக்கும் குணம் கொண்டது. புதினா சாறை எடுத்து தலை வலி ஏற்படும் இடத்தில் பற்று போட்டால் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபடலாம்.
ஒற்றைத் தலைவலியை போக்க துளசி ஓர் அருமருந்து
காரணமில்லாமல் துளசி இலைகளை கோவில்களில் பிரசாதமாக கொடுப்பது இல்லை. துளசி பலவிதமான நோய்களுக்கு ஓர் அருமையான மருந்து. ஓரு துளசி செடி வீட்டில் இருந்தால் அந்த வீட்டை நோய் நொடிகள் அண்டாது. எந்த நோய் அறிகுறியாய் இருந்தாலும் நாலு துளசி இலைகளை பறித்து வாயில் போட்டு மென்று துளசி சாறை ரசித்து உட்கொள்ள பழகி விட்டால் அதை விட சிறந்த முதலுதவி வேறேதும் இல்லை. துளசி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து சிறிது நீர் வற்றியதும் அந்த துளசி நீரை பருகினால் ஒற்றைத் தலைவலி பறந்துவிடும்.
ஒற்றைத் தலைவலியை உடனே போக்க கிராம்பு மருந்து
சிறிது கிராம்பை எடுத்து இடித்துக் கொண்டு ஒரு சிறு துணியில் வைத்து தலைவலி ஏற்படும் போது முகர்ந்து பார்த்தால் ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனே விடுபடலாம்.
ஒற்றைத் தலைவலியை உடனே போக்க கிரீன் டீ, எலுமிச்சை மருந்து
கிரீன் டீயில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனே விடுபடலாம்.
ஒற்றைத் தலைவலியை போக்க எலுமிச்சை பழத்தோல் மருந்து
எலுமிச்சைப்பழத் தோலை அரைத்து விழுதாக்கி நெற்றியில் பற்று போடுவதால் ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
ஒற்றைத் தலைவலியை போக்க வெற்றிலை சாறு பற்று
வெற்றிலை சாறை எடுத்து தலையில் பற்று போடுவதன் மூலம் தற்காலிகமாக ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபடலாம்.
ஒற்றைத் தலைவலியை போக்க தர்பூசணி மருந்து
நீரிழப்பினால் ஏற்படும் ஒற்றைத் தலைவலியானது தர்பூசணி பழம் உண்பதினால் குறையும். தர்பூசணிப் பழத்தில் அதிகமான நீர்சத்து உள்ளது. ஆனால் தர்பூசணி குறிப்பிட்ட பருவகாலத்தில் மட்டுமே கிடைக்கும். அந்த காலத்தில் இந்த மருத்துவ முறையை எடுத்துக் கொள்ளலாம்.
ஒற்றைத் தலைவலிக்கு வாழைப்பழம் ஒரு மருந்து
ஒற்றைத்தலைவலியைப் போக்கும் சக்தி மக்நீசியம் மற்றும் பொட்டாசியத்தில் அதிகம் உள்ளது. இந்த இரண்டு சத்துக்களும் வாழைப் பழத்தில் அதிகம் உள்ளன. வாழை பழத்தினை உண்பதின் மூலம் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபடலாம். மேலும் வாழைப்பழம் மன அழுத்தத்தைப் போக்கும் பொருளாகவும் உள்ளது.
ஒற்றைத் தலைவலிக்கு காளான் ஒரு மருந்து
விட்டமின் பி2 (B2) ஒற்றைத் தலைவலியை போக்கும் தன்மை கொண்டது. காளானில் வைட்டமின் பி2 அதிகம் உள்ளது. காளான் அதிகம் உண்பதால் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபடலாம்.
ஒற்றைத் தலைவலிக்கு வெள்ளரிக்காய் ஒரு மருந்து
நீர்சத்து அதிகம் உள்ள வெள்ளரிக்காயை உண்பதினால் நீரிழப்பினால் ஏற்படும் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபடலாம்.
ஒற்றைத் தலைவலியை போக்க ஆப்பிள் ஒரு மருந்து
ஆப்பிளில் ஒற்றைத் தலைவலியை போக்கக் கூடிய மக்நீசியம் அதிகம் உள்ளது. ஆப்பிளை உண்பதன் மூலம் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபடலாம்.
ஒற்றைத் தலைவலிக்கு கேரட் ஒரு அருமருந்து
அடிக்கடி ஒற்றை தலைவலியினால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு காரட் சாப்பிடுவதன் மூலம் ஒற்றைத் தலைவலியில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.
பட்டை – Pattai – Pattai
வாழைப்பழம் – Vaalaipazham – Banana
வெற்றிலை – Vetrilai – Betel
துளசி – Thulasi – Basil
கிராம்பு – Kiraambu – Clove
புதினா – Puthina – Mint
இஞ்சி – Inchi – Ginger
காளான் – Kaalaan – Mushroom
மல்லி காபி – Malli coffee – Malli Coffee
ஆப்பிள் – Apple – Apple
வெள்ளரிக்காய் – Vellarikkaai – Cucumber
எலுமிச்சை – Elumichai – Lemon
தர்பூசணி – Tharpoosani – Watermelon
கிரீன் டீ – Green Tea – Green Tea
கேரட் – Karat – Carrot
———————————————————-