தலைவலி தீர

“தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்” என்ற பழமொழி தலைவலியின் கொடுமையை மிக எளிதாக உணர்த்துகிறது. ஐந்தே நிமிடத்தில் வீட்டில் கிடைக்கும் இயற்கையான பொருட்களை கொண்டு தலைவலியை எவ்வாறு விரட்டலாம் என்பதை பார்ப்போம்.

மனிதனுக்கு ஏற்படுகிற அசௌகர்யங்களில்  தலைவலி மிகப் பெரிய ஒன்று. தலைவலி ஏற்பட்டால் மனிதனால் எந்த வேலையையும் ஒழுங்காக  செய்ய முடியாது. தலைவலியை பொருட்படுத்தாமல் எதாவது வேலையை செய்தால் தலை வலி மேலும் மேலும்  அதிகரிக்கும். இன்று கடைகளில் வலி நிவாரண மாத்திரைகள் நிறைய கிடைகின்றன. அதன் மூலம் நாம் உடனடி  நிவாரணம் அடையலாம். ஆனால் அதனை அடிக்கடி எடுத்துகொள்வது மிகபெரிய தவறு என்பது பெரும்பாலான  மருத்துவர்களின் அறிவுரை. அதையும் மீறி நாம் மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்து விட்டால் அதுவே காலபோக்கில் பழக்கமாகிவிடும். ஒரு கட்டத்திற்கு பிறகு மாத்திரை இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. எளிய முறையில் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு இயற்கை முறையில் தலைவலியை விரட்டினால் உடலிற்கு எந்த தீங்கும் ஏற்படாது.

தலைவலியின் அறிகுறிகள்

தலை முழுவதும்  பாரமாக உணர்தல். குமட்டல் உண்டாவது, வாந்தி, ஒளி, ஒலிக்கான சகிப்புத் தன்மை குறைவு, தலையின் ஒரு புறம் உட்புறம் துடிப்பது போன்ற உணர்வு கூட உண்டாகும். சுத்தியால் தலையில் அடிப்பது போன்ற உணர்வு ஏற்படுதல் போன்றவை ஆகும். சிலசமயம் ஒரு பக்கம் மட்டும் தலைவலி உண்டாகும். ஒரு சிலருக்கு தலைவலி தலையின் ஒரு பக்கம் மட்டும் ஏற்படும். இது ஒற்றைத் தலைவலி ஆகும். ஒரு சிலருக்கு தலைவலி என்பது தலை முழுதும் பாரமாக இருப்பது போன்று இருக்கும்.

தலைவலி ஒரு நரம்பியல் தொடர்பான நோயாகும்.  எந்த வேலையையும் முழுமனதோடு செய்யமுடியாமல் போகும். இதன் முக்கிய காரணம் மூளையில் செரோடோனின் மாறுபடுவதே என கருதப்படுகிறது. (செரோடோனின் என்பது நம்மை சாந்தமாக வைத்திருக்க உதவும் ஒரு ரசாயனம். மனிதன் மகிழ்ச்சியாகவும் நாலமாகவும் இருப்பதாக நினைக்கும் உணர்வுகளுக்கு செரோடோனின் பங்களிப்பதாக பொதுவாக நம்பபடுகிறது.). பரம்பரை காரணிகள் கூட ஒற்றை தலைவலியை ஏற்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள்  தெரிவித்துள்ளனர். ஆண்களை விட பெண்களை இந்த நோய் அதிகம் பாதிக்கிறது. பெரும்பாலனவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 4 முதல் 5 முறை தலைவலி வருகிறது. பெரும்பாலனவர்கள் அதிக ஒலியை கேட்டாலோ அல்லது அதிக ஒளியை பார்த்தாலோ தலைவலி வருவதை உணர்வார்கள். அந்த நேரத்தில் அவர்கள் அமைதியான வெளிச்சம் குறைவான இடங்களில் இருப்பதை  விரும்புவார்கள். தூக்கமின்மைதான் தலைவலிக்கு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. தினமும் குறைந்தது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். அதிகமாக மது அருந்தினால் தலைவலி உண்டாகும்.  சிலர் அதிக வேலைப்பளு காரணமாக நீர் அருந்த மறந்து விடுவார்கள். அதுவும் தலைவலிக்கு காரணமாகும். நீரிழப்பினால் உண்டாகும் தலைவலி குனிந்து எதாவது பொருளை எடுத்தாலே உண்டாகும். இருமினால் கூட தலைவலி ஏற்படும். மன அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிகமாக தலைவலி உண்டாகும். இரத்த கொதிப்பு நோய் உள்ளவர்கள் தலைவலியால் அதிகம் பாதிக்கபடுவார்கள்.

கண் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கும் தலைவலி ஏற்படும். கண்ணுக்கு அதிக வேலை கொடுத்தால் தலைவலி உண்டாகும். கம்ப்யூட்டரில் வேலை பார்கின்றவர்கள் எப்போதும் மானிட்டரை பார்த்துக்கொண்டே இருப்பதால் அவர்களுக்கு மிக எளிதில் கண் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். அதன் காரணமாக அவர்களுக்கு தலைவலி அடிக்கடி வரும்.

சிலர் தலை முழுவதும் வலிக்கிறது  என்பார்கள். தலையில் அடி பட்டு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு அதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் இது போன்ற தலைவலி உண்டாகும்.

ஒவ்வொரு வகையான தலைவலிக்கும் ஒவ்வொரு காரணங்கள் உள்ளன. தலைவலிக்கு மருத்துவம் பார்ப்பதற்கு முன்னால் நமக்கு எவ்வாறான தலைவலி ஏற்படுகிறது என்பதை அறிய வேண்டும். அதன் பிறகு மருத்துவம் பார்க்க வேண்டும். ஒவ்வொரு வகையான தலைவலிக்கும் ஒவ்வொரு வகையான தீர்வுகள் உள்ளன. சரியான வழியை நாம் பின்பற்ற வேண்டும். இந்த பதிவில் எல்லா வகையான தலைவலிக்கும் எளிதில் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு தலைவலியை விரட்டலாம் என்று தெளிவாக குறிபிடப்பட்டுள்ளது.


தலைவலி தீர வெற்றிலை, கிராம்பு மருந்து

வெற்றிலை எல்லா இடங்களிலும் மிக எளிமையாக கிடைக்கும் ஒரு பொருள். கிராம்பு நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருள். இவற்றைக் கொண்டு தலைவலியை எளிதில் விரட்டலாம் . வெற்றிலையை இடித்துச் சாறு பிழிந்து கொள்ளவேண்டும். அந்த சாற்றில் கிராம்பை நன்றாக அரைத்து எடுத்து தலையின்  இரண்டு பொட்டுப் பகுதிகளில் பூசி வந்தால் தலைவலி குணமாகும்.


தலைவலி தீர கிராம்பு, சீரகம் மருந்து

தலைவலி ஏற்பட முக்கியமான காரணம் வெயிலில் அலைவது. வெயிலில் அலைந்து உடல் சூடால் பாதிக்கப்பட்டோருக்கு கண்டிப்பாக தலைவலி உண்டாகும். அதனை கிராம்பு மற்றும் சீரகம் கொண்டு எளிதாக விரட்டலாம்.கிராம்பு மற்றும் சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து  வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.


தலைவலி தீர கிராம்பு மருந்து

தலைவலி ஏற்படும் பொது அனைவரும் கடைகளில் விற்கும் மருந்துகளை தலையில் பூசுவர். ஒரு சிலருக்கு அது தோல் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதை தவிர்க்க நாம் இயற்கையான பொருட்களை கொண்டு தலைவலியை விரட்டுவதே சிறந்ததாகும். கிராம்பு இயற்கையாக கிடைக்கும் பொருள். கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.


தலைவலி தீர எலுமிச்சை டீ மருந்து

பெரும்பாலனவர்களுக்கு தினமும் காலையில் எழுந்து டீ அல்லது காபி குடிக்காவிடால் அந்த நாள் சுறுசுறுப்பாக அமையாது. ஆனால் அதில் உடலுக்கு நலம் தரும் பொருள்  கலந்து இருந்தால் மிகவும் சிறப்பாக  இருக்கும் அல்லவா? டீ அல்லது காபி குடிக்கும் பொழுது அதில் சிறிது எலுமிச்சம்பழ சாறு கலந்து குடித்தால் தலைவலியை அது விரட்டும். எலுமிச்சம்பழ சாறு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சக்தி படைத்தது. உடல் எடை குறைய தினமும் சுடு நீரில் எலுமிச்சம்பழ சாறு பிழிந்து குடிக்கலாம்.


தலைவலி தீர சுக்கு, பால் மருந்து

தலைவலிக்கு அருமையான மருந்து சுக்கு ஆகும். இதனை சுடு நீரில் கலந்தும் குடிக்கலாம் அல்லது பாலுடன் குழைத்து தலையிலும் பூசலாம். சுக்கு தூளை தாய்ப்பால் விட்டு நன்றாக குழைத்து நெற்றி பொட்டில் சிறிது பூசி வந்தால் தலைவலி குறையும். தாய்ப்பால் கிடைக்காமல் போனால் பசும்பால் பயன்படுத்தலாம். இருப்பினும் தாய்ப்பால் மிகவும் சிறந்தது.


தலைவலி தீர சுக்கு, கற்பூரம் மருந்து

சுக்கு (சுமார் 10 கிராம்)  மிகவும் எளிமையாக கிடைக்கும் பொருள். சுக்கு என்பது காய்ந்த இஞ்சியே ஆகும். அதன் மனம் மிகவும் நன்றாக இருக்கும். சுக்கு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. கற்பூரம் (சுமார் 2 கிராம்) நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள். இவை இரண்டையும் கொண்டு தலை வலியை எளிதாக விரட்டலாம். சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். தோல் நீக்கிய சுக்கை நன்றாக பொடியாக்கி கொள்ளவும். ஒரு மண் பாத்திரத்தில் 1 லிட்டர் தூய நீர் விட்டு கொதிக்க விட்டு சுக்கு தூளை கொட்டி மூடி 5 நிமிடங்கள் கழித்து கற்பூரத்தை போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். இந்த சுக்கு நீரை இளஞ்சூட்டில் தலை, முகம் ஆகியவற்றை காலை, மாலை என தொடர்ந்து கழுவி வந்தால் தலைவலி குறையும்.


தலைவலி தீர சுக்கு, மிளகு, வெள்ளைப்பூண்டு மருந்து

சுக்கு, மிளகு, வெள்ளைபூண்டு இவை மூன்றும் மருத்துவ குணம் அதிகம் கொண்டவை. எல்லா நாட்டு மருத்துவ முறைகளிலும் இந்த மூன்று பொருட்கள் கண்டிப்பாக இருக்கும். குறிப்பாக சுக்கு தலைவலிக்கு அதிகம் பயன்படுகிறது. இன்றும் கிராமங்களில் தலைவலி ஏற்பட்டால் உடனடியாக சுக்கு காபி போட்டு குடிப்பதை நாம் காணலாம்.

சுக்கை (சுமார் 10 கிராம்) தோல் நீக்கி கொள்ளவும். மிளகை (5 கிராம்) இளம் சூட்டில் வறுத்து கொள்ளவும். வெள்ளைப்பூண்டை (5 கிராம்) தோல் நீக்கி கொள்ளவும். மூன்றையும் சிறிது பசும்பால் விட்டு மை போல அரைத்து சிறிதளவு எடுத்து நெற்றியின் இரண்டு பக்கத்திலும் தடவி பற்று போட்டு சிறிது நேரம் கழித்து வெந்நீரால் கழுவி வந்தால் தலைபாரம், அஜீரண தலைவலி ஆகியவை குறையும்.


தலைவலி தீர திருநீற்றுபச்சிலை மருந்து

திருநீற்றுபச்சிலை என்பது பெரும்பாலான வீட்டில் தொட்டியில் வளர்க்க கூடிய ஒரு வகையான மூலிகைச் செடி. பார்ப்பதற்கு துளசி போன்று இருப்பதோடு மனமும் துளசி போன்றே இருக்கும். திருநீற்றுபச்சிலையை எடுத்து முகர்ந்து வந்தால் தலைவலி குறையும். மிக மிக எளிதாக தோன்றும் இந்த மருத்துவம் நல்ல பலனை கொடுக்கும்.


தலைவலி தீர துளசி, சுக்கு, லவங்கம் மருந்து

வீட்டில் துளசி செடி மட்டும் இருந்தால் பலவிதமான நோய்கள் அண்டாது. தலைவலி குணமாக ஐந்தாறு துளசி இலைகளுடன் ஒரு சிறு துண்டு சுக்கு மற்றும் லவங்கம் சேர்த்து நன்கு விழுது போல் அரைத்து நெற்றியில் பற்றாக போட்டால் தலைவலி குணமாகும்.


தலைவலி தீர பச்சை கொத்தமல்லி மருந்து

உணவுக்கு உபயோகிக்கும் பச்சை கொத்தமல்லித் தழைகளை அரைத்து வடிகட்டி தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.———————————————————-
கொத்தமல்லி – Kothamalli – Coriander
வெற்றிலை – Vetrilai – Betel
இலவங்கப் பட்டை – ilavangappattai – Cinnamon bar
மிளகு – Milaku – Pepper
பால் – Paal – Milk
கிராம்பு – Kiraambu – Clove
எலுமிச்சை – Elumichai – Lemon
சீரகம் – Seeragam – Cumin
சுக்கு – Sukku – Dried Ginger
துளசி – Thulasi – Basil
கற்பூரம் – Karpooram – Camphor
பூண்டு – Poondu – Garlic
திருநீற்றுபச்சிலை – Thiruneetrupachilai – Tirunirrupaccilai
———————————————————-Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.